"சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை" என்று காங்கிரஸ் பொதுச் செயலர் வீரப்ப மொய்லி கூறினார்.
தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று அவரின் வீட்டில் சந்தித்துப் பேசிய வீரப்ப மொய்லி, சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரப்ப மொய்லி, "சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில், காங்கிரசுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து முனைப்புடன் உள்ளோம். தற்போது சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆகும் காலதாமத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல. நாங்கள் தற்போதைக்கு அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டிப்பாக ஏற்போம்" என்றார்.