Publish Date: Thu, 28 Feb 2008 (14:31 IST)
Updated Date: Thu, 28 Feb 2008 (14:28 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அவசரம் காட்ட முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
அமெரிக்க வணிகத்துறை துணை அமைச்சர் மேரியோ மேன்குசோவுடன் புது டெல்லியில் இன்று பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுகளை விரைவில் முடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். ஆனால், அவசரம் காட்ட முடியாது" என்றார்.
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுமாறு இந்தியாவிற்கு அமெரிக்க கொடுத்துவரும் அழுத்தம் பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்கு காலக்கெடுவைப் பற்றிக் கவலை இல்லை. ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்" என்றார் சிவசங்கர் மேனன்.
முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், "சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா நடத்திவரும் பேச்சுகளை முடிப்பதற்கு ஜூலை வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சிவசங்கர் மேனன் கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.