புதுச்சேரியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்த வாக்காளர்கள் 7,31,577 பேரில் பெண் வாக்காளர்கள் 3,79,057 பேரும், ஆண் வாக்காளர்கள் 3,52,520 பேரும் உள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 5,57,645 வாக்காளர்களும், காரைக்காலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,20,593 பேரும், மாஹேவில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் 27,776 பேரும், ஏனம் சட்டமன்ற தொகுதியில் 25,563 பேரும் உள்ளனர்.
பெரும்பாலான தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர். அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்கள் 384 பேர் உள்ளனர்.