சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு தயாரித்துள்ள 90 பக்க மனுவிற்கு மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு இன்று ஒப்புதல் அளித்தது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் அமைச்சரவையில் இரண்டு நிலைபாடுகள் உருவாகின.
இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டுக்கள் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக அமைந்ததா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதால் அதுபற்றி உறுதியாக எதுவும் கூற இயலாது என்று பண்பாட்டு அமைச்சகம் கூறியது.
இருந்தாலும், ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டுக்கள் இயற்கையாக அமைந்தவைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஒரு வழியாக மத்திய அரசு மனுவைத் தயாரித்ததுடன், அந்த மனு மத சார்பற்றதாகவும், அதே சமயம் தற்போது பாக். ஜலசந்தி பகுதியில் நடைபெற்று வரும் சேது சமுத்திர திட்டத்தை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்றும் தெரிவித்தது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எரிசக்தி அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, பண்பாட்டு அமைச்சர் அம்பிகா சோனி, சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ், கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மனுவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருந்ததால் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து வேறொரு மனுவைத் தாக்கல் செய்வதற்கு 4 வாரகாலம் அவகாசம் அளித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.