அனைவருக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் எச் காவித் கூறினார்.
இந்த அட்டையை ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட எல்லா விதமான அடையாள ஆவணங்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்தலாம்.
மக்களவையில் பல்நோக்கு அடையாள அட்டை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த காவித், "தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தேசிய அடையாள எண் (National Identity Number) வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பின்பற்றக் கூடிய நடைமுறைகள், தொழில்நுட்ப முறைகளில் சிக்கல்கள் காணப்படுவதால் சோதனை அடிப்படையிலான திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இத்திட்டம் 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மொத்தம் 30.95 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அடையாள அட்டை தயாரித்து விநியோகிக்கும் பணி அடுத்த மாதம் நிறைவு பெறும். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் இப்பணி நிறைவேற்றப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும்" என்றார்.