புதிதாக தயாரித்து இருக்கும் பதில் மனு, மத சார்பற்றதாகவும், அதே சமயம் தற்போது பாக். ஜலசந்தி பகுதியில் நடைபெற்று வரும் சேது சமுத்திர திட்டத்தை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்காக கடலுக்கடியில் உள்ள ராமர் பாலத்தை தகர்க்கக் கூடாது என்று கூறி இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலம் பகுதியில் திட்டத்தை நிறைவேற்ற தடை விதித்தது.
அப்போது இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் பற்றி இடம் பெற்றிருந்த கருத்துகளால் கடும் சர்ச்சை உருவானது. அதையடுத்து அந்த மனுவை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில், மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான ஆணையம் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடியது. கூட்டத்தில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பட்டீல், லாலு பிரசாத், சரத் பவார், டி.ஆர்.பாலு, ப.சிதம்பரம், எச்.ஆர்.பரத்வாஜ், கபில் சிபல், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு பதில் மனு பற்றி ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் இந்த மனு பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் வழங்குவது என்றும், அதன்பிறகு மீண்டும் கூடி விவாதிப்பது என்றும் அமைச்சரவை கூட்டம் தீர்மானித்தது.
புதிதாக தயாரித்து இருக்கும் பதில் மனு, மத சார்பற்றதாகவும், அதே சமயம் தற்போது பாக். ஜலசந்தி பகுதியில் நடைபெற்று வரும் சேது சமுத்திர திட்டத்தை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு கடந்த முறை தாக்கல் செய்த மனுவில் ராமர் பற்றி இடம் பெற்றிருந்த கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் புதிய மனுவில் அதுபோன்ற கருத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் அரசு பதில் மனுவை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.