அஸ்ஸாமின் மனாஸ் தேசிய பூங்காவைச் சேர்ந்த வனத்துறையிடம் 61 வன உயிரின வேட்டைக்காரர்கள் சரணடைந்தனர்.
பிரம்மபுத்ரா நதியை ஒட்டி அமைந்துள்ள மனாஸ் தேசிய பூங்கா 500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடந்த 1990-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்ப்ட்ட இந்த வனப்பகுதியில் 1980 முதல் 1995-ம் ஆண்டிற்குள் 64 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. கிட்டதட்ட காண்டாமிருகத்தின் வம்சமே அழிந்ததால், 'உலக பாரம்பரியமிக்க இடம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது' என்று யுனஸ்கோ கூறியது.
தேசிய பூங்காவை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி எடுக்கப்பட்டாலும் வன உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவது நின்றபாடில்லை. யானை, புலி, காண்டாமிருகம் ஆகிய விலங்குகளை அதிகம் கொண்டிருந்த மனாஸ் தேசிய பூங்கா வேட்டைக்காரர்களின் அராஜகத்தால் பொழிவிழந்துள்ளது.
இந்நிலையில், வேட்டைக்காரர்களாக முன்வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சரணடைந்து வருகின்றனர். நேற்று 61 வன உயிரின வேட்டையர்கள் 26 நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். கும்பலாக வேட்டையர்கள் சரணடைவது கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறை. கடந்த 2006-ம் ஆண்டில் 130 வேட்டையர்கள் கும்பலாக சரணடைந்தனர்.