''முல்லைப் பெரியாறில் ரூ.216 கோடியில் புதிய அணை கட்டப்படும்'' என்று கேரள மாநில முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று சட்டபேரவையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
தற்போது உள்ள 112 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணைக்கு 1,300 அடி கீழே இந்த புதிய அணை கட்டப்பட உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக பெரும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. தற்போது உள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கேரள அரசு, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் அந்த பகுதியில் வசித்து வரும் 3.5 கோடி மக்களின் உயிருக்கு பேராபத்து ஏற்படும் என்று கூறி மறுத்து வருகிறது. இதையடுத்து புதிய அணை கட்டுவதுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்றும் கூறி வருகிறது.
கடந்த 1886ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அவர் பதவியேற்றதிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு 54,076.95 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.