ஜம்மு-காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் பரவி வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
நிதிநிலை அறிக்கை தொடரின் துவக்க நாளான இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர், உத்திரப்பிரதேசம், அசாம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளின் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துதலும், மத்திய மாநில அரசுகளுக்கிடையே உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.
அயலுறவுக் கொள்கையில் மத்திய அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறைகளை விளக்கிப் பேசிய குடியரசுத் தலைவர், இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை கவலையளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு அரசியல் ரீதியான தீர்வே அங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
ஆசியான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
அணு ஆயுதப் பரவல் தடுப்பிற்குப் பதிலாக விரிவான அணு ஆயுத விலக்கல் கொள்கையே சரியாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.