விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
இது குறித்துத் தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சூதாட்டத்தின் மறுபெயர் தான் ஆன்லைன் வர்த்தகம். அது தான் அரிசி மற்றும் கோதுமை விலையைத் தீர்மானிக்கிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கும் உத்தரவையும், வருகின்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வதற்கு உலகமயமும் ஊக வாணிபமும் தான் முழுமுதற் காரணமாகும் என்றார் பிருந்தா.
விலை உயர்வுக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக் கடந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் ஒரு குழு அமைக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் தான் விவசாயத் துறையில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்ட முடியவில்லை என்று குறிப்பிட்ட பிருந்தா, இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ள ஆயிரக்கணக்கான உழவர்களில் பெரும்பாலானவர்கள் கடன் சுமையால் தான் இந்த முடிவிற்குச் சென்றுள்ளனர் என்று கூறினார்.