பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பொருள்கள் பாகுபாடில்லாமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று இடதுசாரி கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பொருள்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வசதியானவர்கள் எனத் தரம் பிரித்து பார்க்காமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.
தற்போது உள்ள உணவுப் பொருள்களின் பங்கீடு முறை மூலம் அதிகப்படியான ஆதி திராவிடர்கள், பழங்குடியின, நிலமில்லா ஏழை மக்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் முழுப் பயனும் மறுக்கப்படுகிறது என்றார்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பொது வினியோகத் திட்ட முறையை நாடு முழுவதும் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பிருந்தா வலியுறுத்தினார்.
மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.