திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த முறை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மாநிலம் முழுவதும் சராசரியாக 81 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல எல்லா வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப் பேரவையின் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று தேர்தல் நடந்தது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. வாக்களிப்பதற்காக மொத்தம் 2,372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித் தகுதி பெற்றவர்களாவர்.
பல்வேறு கட்சிகளின் சார்பில் 28 பெண்கள் உள்பட 313 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணி 49 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகின்றன.