எஃப்.எம். ரேடியோக்களில் செய்திகள் ஒலிபரப்பவும், அவற்றின் நேரடி அன்னிய முதலீட்டு அளவை 49 விழுக்காடாக உயர்த்தவும் இந்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த எஃப்.எம். ரேடியோக்கள் செய்திக்கான மூலங்களை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களிடம் அதாவது யு.என்.ஐ, பி.டி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தோ அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட பிற அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளில் இருந்தோ பெற்று ஒலிபரப்ப அனுமதி வழங்கலாம் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.
இந்திய பொறியியல், ஒளிபரப்புத் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 14-வது சர்வதேச டெரிஸ்டேரியல், செயற்கைக்கோள் ஒளிபரப்பு மாநாடு - கண்காட்சியை டெல்லியில் தொடங்கிவைத்து பேசும் போது, எஃப்.எம்.ரேடியோ தொடர்பான தனது மூன்றாவது கட்ட அறிக்கையை நேற்று டிராய் தாக்கல் செய்து உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளவை தொடர்பாக விரைவில் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய செய்தி-ஒளிபரப்புத் துறைச் செயலாளர் ஆஷா சொரூப் தெரிவித்துள்ளார்.
நேரடி அன்னிய முதலீடுகளை 49 விழுக்காடாக அதிகரிப்பது, எஃப்.எம். ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புக்கு அனுமதி அளிப்பது தவிர்த்து, ஒரே நகரத்தில் பல்வேறு சானல்களுக்கு உரிமையாளராக உள்ள தடையை நீக்கவும், தனியார் எப்.எம். ரேடியோ உரிமம் பெறுவதை நகரத்தில் இருந்த மாவட்டங்களுக்கு மாற்றுவது உள்ளிட்ட பல பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் கட்ட எப்.எம். ரேடியோ செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக கூறினார். அனுமதி வழங்கப்பட்ட 266 எஃப்.எம். ரேடியோ நிலையங்களில் 100 எஃப்.எம். நிலையங்கள் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 97 நிலையங்களுக்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட உள்ளதாகவும் ஆஷா சொரூப் தெரிவித்துள்ளார். டிராய் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது இத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்றும், டிராய் பரிந்துரையில் ஒன்றான கண்டிசனல் ஆக்சஸ் முறையை (CAS) நடைமுறைப்படுத்த தகுந்த செயல் திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.