நாட்டில் மாநகரங்கள், புனிதத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு உட்பட்ட 100 இரயில் நிலையங்களை, அரசு- தனியார் (ppp) பங்களிப்புடன் விமான நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தைப் நடைமுறை படுத்தியதைப் போன்று இரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தி, மேம்படுத்துவதன் மூலம் இந்திய இரயில்வே, சர்வதேச தரத்திற்கு உயருவதுடன், தனது வருவாயையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்று அசோசெம் கூறியுள்ளது.
வரும் 2008 - 09 ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கை வரும் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அசோசெம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
முதலாவதாக குறைந்த தூர இரயில் கட்டணத்தை தற்போதைய 25 பைசாவில் இருந்து 50 பைசாவாக உயர்த்த வேண்டும். இரயில்வே வசம் உள்ள வர்த்தக ரீதியாக பயன்படுத்தத் தகுதியான 43,000 ஹெக்டேர் நிலத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்ட ஒரு சரியான கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுத் தொடர்பாக அசோசெம் தலைவர் வேணுகோபால் என்.டோட் மத்திய இரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதற்கட்டமாக வடக்கு, மேற்கு இரயில்வே மண்டலங்களில் உள்ள இரயில் நிலையங்கள் உடனடியான நவீனப் படுத்தப் படுத்துவதுடன் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்த வேண்டும் என்றும், இதன் மூலம் இரயில்வேயின் வருவாய் ஆதாரத்தை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இந்திய இரயில்வேயின் வருவாயை அதிகரிக்க குறைந்த பட்சம் நாட்டில் உள்ள 100 இரயில் நிலையங்களை அரசு - தனியார் பங்களிப்புடன் நவீனப்படுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் டோட் வலியுறுத்தியுள்ளார்.
இரயில் நிலையங்களைத் தரம் உயர்த்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோருவது , இறுதி செய்தல் ஆகியன வெளிப்படையாக நடைப்பெறும் நிலையில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட பல அடுக்குமாடி வளாகங்கள் நாட்டில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை மேற்கொள்ள தலைசிறந்த திட்டத்தை இரயில்வே அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். இரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், மூலப் பொருட்களை அயல் நாடுகளில் இருந்த இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். மத்திய நிதியமைச்சகத்திடம் இருந்து திட்டச் செலவு, இறக்குமதி வரிவிலக்கு ஆகிய சலுகைகளை மேற்கண்ட நிறுவனங்களுக்கு இரயில்வே அமைச்சகம் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது இரயில்வே நிலங்களின் கட்டுப்பாடு அரசின் கட்டுப்பாட்டை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இரயில்வே வசம் பயன்படுத்தப் படாமல் உள்ள, வர்த்தக ரீதியாக பயன்படுத்த தகுந்த 43,000 ஹெக்டேர் நிலங்களில் அரசு-தனியார் பங்களிப்புடன் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பயன்படுத்தி வருவாய் ஈட்ட வேண்டும் என்றும், அந்த வருவாய் மூலம் இரயில்வேயை நவீனப்படுத்தும் திட்டத்தை உரிய பாதுகாப்பு முறைகளுடன் நடைமுறைப்படுத்த இரயில்வே அமைச்சகம் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் டோட் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இரயில்வே பயன்படுத்தாமல் தன்வசம் வைத்துள்ள நிலங்களில் தனியார்கள் மோட்டல்கள், சிறு தங்கும் விடுதிகள், அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க உரிய வழிமுறைகளும், நிதி சலுகைகளும் நடப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வகைசெய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்திய இரயில்வே நிதிக்குழுமம் தன்னாட்சியுடன் செயல்பட ஏற்ற வகையில் கணிசமான ஒதுக்கீட்டை நிதி அமைச்சகத்திடம் பெறவேண்டும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்திய இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை பயனுள்ளதாக மாற்றி வருவாய் ஈட்டும் வகையில் அரசு-தனியார் பங்கேற்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரயில்வே நிலங்களில் உணவகங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இரயில்வே நிதிக்குழுமம் நீண்டகால அடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் இரயில்வே நிலங்களை வருவாய் ஈட்டத் தகுதியுள்ளதாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இத்திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் இரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் வெளியாகும் போது இரயில்வேயின் பயன்படுத்தப்படாத நிலங்கள் எல்லாம் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வருவதுடன் அரசுக்கும், இத் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கும் அதிகப் பலன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இரயில்வே குறைந்த தூரத்திற்கான கட்டணத்தை 25 பைசாவாக ஒரு கிலோ மீட்டருக்கு நிர்ணயம் செய்துள்ளதால் இரயில் பயணிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும், மாறாக இதனால் இரயில்வேயின் சுமை அதிகரிப்பதுடன், லாபம் குறைகிறது. எனவே, சாலைப் போக்குவரத்தில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை போல கிலோ மீட்டருக்கு 60 பைசா என்று இரயில்வே அமைச்சகம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அசோசெம் தலைவர் வேணுகோபால் என்.டோட் மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.