நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தேசிய ஊரக மருத்துவத் திட்டம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட உள்ள இதிட்டத்தின் மூலம் 450 சிறிய, பெரிய நகரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
மதுபானங்கள் மற்றும் சிகரெட் நிறுவன விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொலைக்காட்சி, இணையதளம், பத்திரிக்கைகளில் மதுபானம், சிகரெட் நிறுவனங்களின் விளம்பரம் போன்றே மற்ற தயாரிப்புகளுக்கும் விளம்பரம் அளிப்பதை தகவல் ஒளிப்பரப்புத்துறைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
சில மதுபான நிறுவனங்கள் சோடா மற்றும் மினரல் வாட்டர் தயாரிக்கின்றன. இவற்றின் விளம்பரம் மதுபான பாட்டில்களின் லோகோவுடன் வருகிறது. எனவே பார்த்தவுடன் அது மதுபான விளம்பரம் போல தோற்றமளிக்கிறது. எனவே அவற்றை வித்தியாசப்படுத்தி காண்பிக்கும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.