திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
நண்பகல் வரை சராசரியாக 50 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்த வன்முறையும் இன்றி வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப் பேரவையின் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. வாக்களிப்பதற்காக மொத்தம் 2,372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பல்வேறு கட்சிகளின் சார்பில் 313 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பணிகளில் 16 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்தல் அதிகாரிக்கும் தனித்தனியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தேர்தல் பாதுகாப்பிற்காக எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை, துணை ராணுவப்படை வீரர்கள் உள்பட 60 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான 108 வாக்குச் சாவடிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள மலைப் பகுதிகளிலும் தொலைதூர கிராமப் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் சென்று வாக்குப் பதிவை கண்காணித்தனர்.
இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணியில் இருந்து ஃபார்வர்ட் பிளாக் கட்சி தனியாக பிரிந்து விட்டது. முதல் முறையாக ஃபார்வர்ட் பிளாக் ஆதரவு இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சி தேர்தலை சந்திக்கிறது.
பா.ஜ.க. கூட்டணி 49 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகின்றன.