பயங்கரவாதச் சக்திகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாற்றுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், "ஜம்மு- காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கரவாதம் தற்போது குறைந்துள்ளது. நக்சலைட்டுகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆந்திரப் பிரதேசம் தற்போது அமைதியாக உள்ளது. நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்றார்.
பயங்கரவாத இயக்கங்களினால் ஆபத்து என்று கூறி மக்களைத் திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
"இந்த விடயத்தில் கூக்குரலிடுவதன் மூலம் மக்களைத் திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் நாடாளுமன்றம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை பயங்கரவாதிகள் தாக்கினர்" என்றார் ஜெய்ஸ்வால்.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, ஹெலிகாப்டர்கள், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றார் அவர்.
உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட ஜெய்ஸ்வால், அண்மையில் ராம்பூரில் மத்திய ரிசர்வ் காவல்படை முகாமின் மீது நடந்த தாக்குதல்களுக்கு மாநில அரசும், மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகளுமே காரணம் என்று குற்றம்சாற்றினார்.
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாற்று பற்றிக் கேட்டதற்கு, இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுப்பதற்கு சாதாரணமாக 6 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றார்.