வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட 1,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய எரி சக்தி துறை செயலாளர் வி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தேசிய அளவிலான எரிபொருள் செல் தொழில்நுட்பம் கருத்தரங்கை சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகமும், கனடாநாட்டின் கிங்ஸ்டன் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையின் செயலாளர் வி.சுப்பிரமணியம், நாட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஹைட்ரஜன் எரிசக்தி (Hydrogen energy ), எரிபொருள் செல் தொழில் நுட்பம் (fuel cell technology) ஆகியவற்றை வர்த்தக மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உயர்மட்ட அளவிலான தேசிய ஹைடிரஜன் வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த வாரியம் புதிய தொழில் நுட்பத்தை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வழி முறைகளையும் கண்டறியும் என்று தெரிவித்துஉள்ளார்.
தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி செயல் திட்டக்குழு இரண்டு முன்னோடிதிட்டங்களை பரிந்துரைத்துள்ளது என்று கூறிய அவர், வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட 10 லட்சம் வாகனங்களை அறிமுகப் படுத்துவது, மொத்தத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட 1,000 மெகாவாட் மின்சக்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது அந்த இரண்டு பரிந்துரைகள் என்று சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த வழிமுறையில் சோதனை விளக்க முறையும் அடங்கும். ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும்
எரிபொருள் செல்ஆகியவற்றை வாகனங்களை இயக்கவும், மின் உற்பத்திக்குபயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டமிட்டு வருகிறது.
இதுத் தொடர்பாக அமைச்சகம் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுத் துறை, தனியார் துறை நிறுவனங்கள் குறிப்பாக மோட்டார் வாகனத் துறை, உபகரணங்கள் உற்பத்தியாளர்கள், தொழில் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் தலைநகர் டெல்லியில் முதல் ஹைட்ரஜன் எரிவாயு விநியோக நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பிச்சமுத்து பேசும்போது, அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை எதிர்க் கொள்ள எரிபொருள் செல் தொழில்நுட்பம் அவசியமாவதாகவும்,தீங்கிழைக்கும் எரிபொருட்களின் தேவையை குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் சுத்தமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த எரிசக்தி நிலைத்த, நிச்சயமுள்ள, பாதுகாப்பான, அதேநேரத்தில் நமது தேவைக்கும் அதிகமான அளவில் உள்ளதாகவும், அணுசக்தி ஒரு மாற்று எரிபொருளாக உள்ளதைப் போன்று இன்னும் பல மாற்று எரிசத்திகள் உள்ளன. அவற்றுள் எரிபொருள் செல் தொழில்நுட்பமும் ஒன்று என டி.ஆர்.பிச்சமுத்து கூறியுள்ளார்.