மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசு உடல்நலக் குறைவின் காரணமாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள ஜோதிபாசு, தனது இம்முடிவு குறித்து கட்சித் தலைமையிடம் வாய்மொழியாகத் தெரிவித்துள்ளதாக கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், மார்ச் 29 ஆம் தேதி கோவையில் நடக்கவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தான் பங்கேற்க இயலாது என்றும், அரசியல் தலைமைக் குழுவில் இருந்து தன்னை விடுக்கும்படியும் கூறியுள்ளதாக ஜோதிபாசு தெரிவித்தார்.
கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி வலது- இடது என இரு பிரிவுகளாகப் பிரிந்த காலத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வருபவர் ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இப்போது 94 வயதாகிறது.