சிறுநீரக மோசடிக் கும்பல் தலைவன் அமித் குமாரை மார்ச் 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களிடம் மோசடி செய்து அவர்களின் சிறுநீரகங்களை எடுத்துப் பல கோடி ரூபாய்க்கு விற்ற குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் குமார் காவல் நீட்டிப்பிற்காக இன்று (வெள்ளிக்கிழமை) ம.பு.க. நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார்.
அமித் குமாரை காவல்துறையின் காவலில் எடுத்து விசாரிக்க ம.பு.க. விரும்பாததால், அவரின் நீதிமன்றக் காவலை மார்ச் 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு நடந்த நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அமீத் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அமீத் குமாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது குறித்து எந்தவித உத்தரவையும் நீதிபதி வழங்கவில்லை.