மும்பை உள்ளிட்ட மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடிப்பதற்குக் காரணமான மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவின் வட இந்தியர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வருத்தமளிக்கிறது என்றும், மண்ணின் மைந்தன் கொள்கையை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான இரண்டு பொதுநல வழக்குகளை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, "மராட்டியத்தில் நிலவும் சூழலையும், அங்கு என்ன நடந்தது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். இது ஒன்றுபட்ட நாடு. இங்கு மண்ணின் மைந்தன் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்றனர்.
இருந்தாலும், வன்முறைகள் தொடர்பான இந்தப் பொதுநல வழக்குகளின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
மனுக்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழுக்க முழுக்கச் சட்டம் ஒழுங்கு சார்ந்தவை என்பதால், அவை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல உகந்தவை என்றும், மனுதாரர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகித் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.