நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவையடுத்து அமைச்சர் வல்சராஜ் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மாஹேயில் கூட்டுறவு தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. இதன் தலைவராக சட்டத்துறை அமைச்சர் வல்சராஜ் உள்ளார். இந்த மையம் அமைப்பதற்கு நிலம் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜ், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணை செய்து அதற்கான அறிக்கையை வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் வல்சராஜ் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் வல்சராஜ் பதவி விலக பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுத்தியுள்ளன.