பெண் மென்பொருள் வல்லுநர் இறந்த வழக்கில், நாஸ்காம் தலைவர் ஷாம் மிட்டல் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெண் மென்பொருள் வல்லுநர் ஒருவர் நள்ளிரவில் பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணமடைந்த வழக்கில், அந்த பெண் ஊழியர்க்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக தம்மீது காவல் துறையினர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஷாம் மிட்டல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. இரவீந்திரன், ஜே.எம். பாஞ்சல் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிணைய விடுதலை கோருவது தொடர்பாக இவ்வழக்கில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பரிந்துரைத்த கருத்துக்களை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
தற்போது நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்குக்கும், அவரது உத்தரவுக்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவின் உத்தரவை அவருடன் அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான ஹெச்.கே. சேமா ஏற்றுக் கொள்ளாததையும் நீதிபதிகள் இந்த வழக்கில் கருத்தில் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம் நாஸ்காம் அமைப்பின் தலைவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செயததன் மூலம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.