சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 101 டாலர்( 4,044 ரூபாயாக) உயர்ந்து உள்ளதையடுத்து நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தின்ஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலையாக இல்லாததால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சிக்கல் உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை நேற்று நியூயார்க் பங்குச் சந்தையில் 101 டாலரை எட்டியது. இந்த விலை உயர்வு அடித்தட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை பாதித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் அரசுகள் திணறிவருவதாக கவலை தெரிவித்துள்ள தின்ஷா பட்டேல், கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த அளவு அதிகரித்த நிலையிலும் நாட்டு மக்களின் நலன் கருதி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் விலையேற்றத்துக்கு ஈடாக பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை என்றார்.
கடந்த 2006 - 07 ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் தேவை 12 கோடியே 70 லட்சம் டன்னாக இருந்ததாகவும், இது வரும் 2011 - 12 ஆம் நிதியாண்டில் 14.50 கோடி டன்களாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி தற்போதைய 3 கோடியே 40 லட்சம் டன்னில் இருந்து 4 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதியை குறைக்கும் வகையில் 7 - வது சுற்று கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ள பகுதிகளை இனங் கண்டறியும் திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இத்திட்டத்தில் 16,000 கோடி ரூபாய் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 7-வது திட்டத்தில் மொத்தம் 57 மண்டலங்களில் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளதா என்பதைக் கண்டறிய புதிய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரையிலான 6 சுற்றுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட பணிகளில் 32,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்க்ப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தின்ஷா பட்டேல் தெரிவித்து உள்ளார்.