தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மக்களுக்காக சென்னை மெரீனா கடற்கரையில் லாலு பிரசாத் யாதவ் பூஜை நடத்தட்டும் என்று சிவ் சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.
மராட்டியத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு எதிராக மராட்டிய நவ நிர்மான் சேனா இயக்கத் தலைவர் ராஜ் தாக்ரே நடத்திய போராட்டத்தை மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கண்டித்ததுடன், ராஜ் தாக்ரேவிற்கு எதிராக மும்பையில் `சாட்' பூஜை நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த விடயம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தது.
இந்நிலையில் ராஜ் தாக்ரேவின் உறவினரும், சிவ் சேனா கட்சித் தலைவருமான பால் தாக்ரே தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது.
பீகாரிகளுக்காக மும்பையில் சாட் பூஜை நடத்துவதாக லாலு பிரசாத் அறிவித்தார். இப்போது தமிழகத்திலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். எனவே, கருணாநிதி அரசை எதிர்த்து லாலு பிரசாத் சென்னை மெரீனா கடற்கரையில் சாட் பூஜை நடத்தட்டும். தமிழகத்தில் லாலு பிரசாத்தின் கூட்டணிக் கட்சிதான் ஆட்சி நடத்துகிறது. இதனால், தமிழகத்தில் வசிக்கும் பீகாரிகளுக்காக அவர் இதைச் செய்யலாமே.
மும்பை மாநகராட்சியில் அலுவல் மொழியாக ஹிந்தியைக் கொண்டுவர வேண்டும் என்று வட இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் கூறுகிறார்கள். இதை அவர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, கெளகாத்தியில் செய்து பார்க்கலாமே.
மண்ணின் மைந்தர்கள் மும்பையிலும் சரி மராட்டியத்திலும் சரி அவமதிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.