தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக முடிக்கும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 இல் இருந்து 30 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, 1956 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றச் சட்டத்தில் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மனுதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.