வருகிற 25 ஆம் தேதி துவங்கவுள்ள நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின்போது அமளியில் ஈடுபடுவதைத் தவிர்த்து நாடாளுமன்றம் அமைதியான முறையில் இயங்க ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில், இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், "நாடாளுமன்ற அலுவல்களுடன் ஒத்துழைக்குமாறு எல்லா அரசியல் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். முக்கியமான விடயங்கள் பற்றி விவாதிக்கும் போதும், சாதாரண மக்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கும் போதும் கட்டுப்பாட்டுடன் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்" என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை நடந்த ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும், எதிர்க் கட்சிகளின் திட்டமிட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியதாகவும், எந்த விடயமும் ஓழுங்கான முறையில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.