இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தம் மீது பேச்சுகளை முடித்து அதன் மே மாதத்திற்குள் அமெரிக்கக் காங்கிரசிற்கு இந்தியா அனுப்பினால்தான், ஜூலை மாதத்திற்குள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்றும், தவறினால் அடுத்து வரக்கூடிய அமெரிக்க அரசு எல்லா விதிகளையும் மீண்டும் பரிசீலிக்கக் கூடிய கட்டாயம் உள்ளதெனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்துப் புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க காங்கிரசின் அயலுறவுக் குழுத் தலைவர் ஜோசப் ஆர் பைடன் (ஜனநாயகக் கட்சி), காங்கிரஸ் உறுப்பினர்கள் சுச் ஹெகல்(குடியரசுக் கட்சி), ஜான் கெர்ரி (ஜனநாயகக் கட்சி) ஆகியோர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் முடிவடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், அடுத்து வரக்கூடிய அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீண்டும் பரிசீலிக்க நேரிடும் என்றும் கூறினர்.
புதிய அமெரிக்க அரசானது அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சர்வதேச விதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நெருக்கடியும் உள்ளதென அவர்கள் கூறினர்.
அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் விடயம் தொடர்பாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள், நெருக்கடிகள் பற்றி தங்களுக்கு புரிந்துள்ளதாகவும், ஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் தோல்வியடைய நேர்ந்தால், அமெரிக்காவைப் பற்றிய தவறான புரிதல்கள் இந்தியாவில் அதிகரிக்கும் என்று தாங்கள் கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
''எங்களுக்கு காலம் கடந்து வருகிறது. ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கக் காங்கிரசிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் வரைவு வரவில்லை என்றால், விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் எங்களுக்கு அது கிடைக்காவிட்டால்,
அடுத்த அமெரிக்க அதிபர் இதே ஒப்பந்தத்தை தொடர்வார் என்று உறுதியாகக் கூற முடியாது. மீண்டும் பேச்சு நடத்தலாம்... அப்போது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மீண்டும் இந்தியாவிற்கு ஏற்படும்'' என்றார் பைடன்.
இந்தியாவின் நல்லுறவு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதால், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கெர்ரி கூறுகையில், ''சர்வதேச அணுசக்தி முகமையுடனான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா மேற்கொள்ளவில்லை என்றால் நிலை மோசமாகிவிடும்'' என்றார். இந்தியாவுடன் அமெரிக்கா தொடர விரும்பும் நல்லுறவின் ஒரு அங்கம் தான் அணுசக்தி ஒப்பந்தம் என்றும் அவர் கூறினார்.
''தெற்காசிய மண்டலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் ஒரு பகுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற காலதாமதம் ஆகுமானால், நம்பிக்கையின்மையினால் நிராகரிக்கப்பட்டதாகவே கருத நேரிடும். நாங்கள் இந்தியாவை நம்புகிறோம். இந்தியா நிச்சயமாக ஒத்துழைக்க வேண்டும்'' என்றார் கெர்ரி.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலைப் பார்வையிட வந்திருந்த இவர்கள் மூவரும், இன்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசினர்.