பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பிப்பார் என்று நம்புவதாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் நடந்த பரோடா வங்கியின் 1,000 மாவது சுய உதவிக் குழுத் துவக்க விழாவில் பேசிய சோனியா காந்தி, "இம்மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை, பொதுமக்களின் பிரச்சனைகள், குறிப்பாகப் பெண்கள், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி அமைச்சர் சிதம்பரம் தயாரிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
நமது நாட்டில் 8 முதல் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது பெரிய சாதனை அல்ல என்று குறிப்பிட்ட சோனியா, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்றும், அனைவருக்கும் தரமான கல்வியும், தரமான மருத்துவ வசதியும் கிடைக்கச் செய்வதே உண்மையான மகிழ்ச்சிக்கு அவசியமாகும் என்றும் கூறினார்.
இவ்விழாவில் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், "விவசாயிகளுக்கு கடன் வழங்குவது என்பது அவர்களுக்கு வங்கிகள் தரும் சலுகை அல்ல. கடன் வழங்குவதன் மூலமாக வங்கிகள் தங்கள் கடமையைச் செய்கின்றன" என்றார்.
மேலும், விவசாயத் துறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயக் கடன்களை அதிகரிக்கவும், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவும், வீடுகள் கட்ட குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றிற்கும் நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சமீபத்தில் சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பெண்கள் குழுவினர், நாட்டின் சில இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் விதவையான பெண்களுக்கு உதவுமாறும், வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் தருமாறும் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.