சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சராவிற்கு இடைக்காலப் பிணை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி டி.என்.பட்டேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழங்குடியினக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவரான வன்சரா தனது உறவினரின் திருமணத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டிய தேவை உள்ளது என்று அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய் கோக்ஷி வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வன்சராவிற்கு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 72 மணி நேரத்திற்குப் பிணைய விடுதலை வழங்குமாறு சபர்மதி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வன்சரா சிறைக்குத் திரும்பிவிட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்யும் திட்டத்துடன் வந்த லஸ்கர் இ தாயிபா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்று கூறி, சோராபுதீன் ஷேக்கையும் அவரின் மனைவி கெளசர் பீ யையும் கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்தப் போலி என்கவுண்டர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஐ.ஜி.பி. கீதா ஜோக்ரி தலைமையில் குற்றப் புலனாய்வுக் குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.