திரிபுராவில் ஆளும் இடதுசாரிகள் மத்திய அரசின் திட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாற்றினார்.
வடக்குத் திரிபுராவில் உள்ள உதய்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையில் அமைதியை ஏற்படுத்துவதுடன், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல், வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
வருகிற 23 ஆம் தேதி நடக்கவுள்ள திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்புத் திட்டங்களில் திரிபுராவிற்குத்தான் மத்தியில் அளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது என்றார்.
திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசைக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மன்மோகன் சிங், திரிபுராவின் வளர்ச்சிக்குப் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கினாலும் அதைப் பயன்படுத்துவதில் மாநில அரசுக்கு திறனில்லாததால் எதிர்பார்தத அளவிற்குப் பலன்கள் கிடைக்கவில்லை என்றார்.