கர்நாடகம் மாநிலம் பெல்லாரியில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்து வந்த பசவராஜேஸ்வரி நீண்ட நாள் உடல் நல குறைவின் காரணமாக இன்று காலமானார்.
86 வயதாகும் அவருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். முதன் முதலாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் நான்கு தலைமுறைக்கும் மேலாக அக்கட்சிக்காக உழைத்து வந்தார்.
கடந்த 1993-96ம் ஆண்டு காலக்கட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அவர் கடந்த 2004ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.
பெல்லாரி தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் கர்நாடக சட்டசபை உறுப்பினராகவும் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு நாளை ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கெஜ்ஜாலகாட்டா என்ற இடத்தில் நடக்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.