அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்குப் பலன்கள் அதிகம் என்பதால், அதில் கையெழுத்திட மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது என்று புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும், தேசிய உயர் கல்வி மையத்தின் இயக்குநருமான கே.கஸ்துரி ரங்கன் கூறியுள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் வகையிலான இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் ஒப்பந்தம் மட்டுமல்ல, மாறாக அணுசக்தி அல்லது அணுசக்தி எரிபொருளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியா பெறுவதற்கு உதவும் ஒப்பந்தம் ஆகும்.
அணுஎரிபொருள் வைத்திருக்கும் 42 நாடுகளுடன் இந்தியா வணிகத் தொடர்பு கொள்ளவும், அணுசக்தி தொழில் நுட்பம், அணுசக்தி உற்பத்திக்கான மூலப்பொருளைப் பெறுவதற்கும் இந்த ஒப்பந்தம் மிகவும் இன்றியமையாதது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என்றால் பிற நாடுகளின் ஆதரவில் இருந்து இந்தியா தனித்து விடப்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் சமமான பங்காளிகள்தான், இந்தியா கீழ் நிலையில் உள்ளதைப் போல கருத வேண்டாம். அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு நாம் அளிக்கும் ஒத்துழைப்பால் பயன் அடையப்போவது நாம் தானே தவிர, வேறு யாரும் அல்ல.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசியல் வாதிகள் இடையே இருவேறு கருத்துக்கள் இருப்பதாக நான் கருதவில்லை.
எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளுமே நாட்டின் நலனைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன.
பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களிடம் பலமுறை இது தொடர்பாக விவாதித்ததில், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் அவரவர்களுக்கு என்று தனி நிலைப் பாட்டைக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. அந்த அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் அணுசக்தி என்று எல்லாக் கட்சிகளும் தெரிந்து வைத்துள்ளதால் தான், இந்த ஒப்பந்தத்தை எந்த கட்சியுமே கடுமையாக எதிர்க்கவில்லை. நாட்டின் தேவையை நிறைவேற்றும் அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில் தான் அரசியல் கட்சிகள் இப்பிரச்சனையை அணுகுகின்றன.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் எதுவும் ஏற்படாது. ஏனேன்றால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டுமே வரவேற்கின்றன. எனினும், அமெரிக்காவில் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட இன்னும் காலம் அதிகம் உள்ள நிலையில் அப்போது நடக்கப் போவது குறித்து தற்போது எதுவும் சொல்ல இயலாது.
இவ்வாறு கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.