சத்தீஷ்கர் மாநிலம், பிஜபூர் மாவட்டத்தில் உள்ள தட்கால் வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 5 காவலர்கள், நக்சலைட்டுகள் 3 பேர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இன்று மதியம் 1.15 மணிக்கு மிர்ட்டுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றனர். அப்போது, மறைந்திருந்த நக்சலைட்டுகள் காவலர்களைத் தாக்கினர். இதையடுத்து காவலர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
குறைந்த நேரமே நீடித்த இம்மோதலில் மத்திய ரிவர்வ் காவல் படையைச் சேர்ந்த 5 காவலர்களும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 3 நக்சலைட்டுகளும் பலியாயினர் என்று காவல் துறை ஐ.ஜி. விஜ் தெரிவித்தார். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சத்தீஷ்கரில் கடந்த 2005 ஆம் ஆண்டு நக்சலைட்டு இயக்கத்திற்கு எதிரான பிரச்சாரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைக் கடுமையாக எதிர்க்கும் நக்சலைட்டுகள், இதுவரை 800 க்கும் மேற்பட்ட பொது மக்களையும், 250 க்கும் மேற்பட்ட காவலர்களையும் தாக்குதல்களின் மூலம் கொன்றுள்ளனர்.