தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து டெல்லி மாநகரக் காவல்துறை இணை ஆணையர்(சிறப்புப் பிரிவு) கர்னல் சிங் கூறுகையில், "டெல்லியின் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்தன் அடிப்படையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
இது வழக்கமான எச்சரிக்கை தான் என்று குறிப்பிட்ட சிங், எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் காவல்துறையினர் விழிப்புடன் உள்ளனர் என்றார்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் என எல்லாவிதமான முக்கியத்துவம் மிக்க பகுதிகளிலும் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க காவல்துறை ஆணையர் தத்வால் ஆணை பிறப்பித்துள்ளார்.
"இதில் பயப்பட ஏதும் இல்லை. நாங்கள் விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகிறோம்" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.