இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் போதும், ரஷ்யா, பிரான்ஸ் உடனான அணுசக்தி ஒத்துழைப்பு மூலமும் அணுசக்தி எரிபொருள் கிடைப்பதால் தென்னிந்தியா அதிகம் பயனடைய வாய்ப்பு உள்ளதாக அணுசக்தி துறையின் முன்னாள் தலைவரும், தற்போது அணுசக்தி முகமையின் உறுப்பினராக உள்ள எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவையில் அணுசக்தி துறை ஏற்பாடு செய்திருந்த அணு வாரக் கொண்டாட்டங்கள்-2008 ல் கலந்து கொண்டு பேசிய அணுசக்தி முகமை உறுப்பினர் எம்.ஆர்.சீனிவாசன், இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால் முதலில் நாட்டின் மிகப்பெரிய அணுசக்தி வளாகம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடன்குளத்தில் அமைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
தற்போது கட்டப்பட்டு வரும் 2 அணு உலைகள் உள்ளிட்ட 6 அணு உலைகள் மூலம் 2,000 முதல் 6,000 மெகாவாட் மின்சாரத்தை கூடன்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தமிழகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மின் பற்றாக்குறையை எதிர்க்கொள்ள போதுமானது என்றும் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்து உள்ளார். தற்போது கூடன்குளத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி வரும் 2010 -க்குள் முடிவடைந்துவிடும் என்றும் எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்திய அணுசக்தி துறை கர்நாடகா மாநிலத்தில் உள்ள கெய்காவில் அணுசக்தி உற்பத்தி நிலையம் ஒன்றையும், இராஜஸ்தான் மாநிலத்தில் 4 அணு உலைகளையும், தமிழகத்தில் அதிவேக ஈணுலை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் சர்கோனியத்தை கடல் மணலில் இருந்து பிரித்தெடுக்க ஒரு நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
சர்க்கோனியம் அணு உலைகள் இயங்க தேவையான எரிபொருளைத் தயாரிக்கவும், அணு உலைகளுக்கான பாகங்கள் தயாரிக்கவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார். 123 ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதில் காலம் கடத்தப்பட்டு வருவதால் அணு உலைகள் இயங்க தேவையான எரிபொருள், கருவிகள் பிற நாடுகளில் இருந்து கிடைப்பதற்கு வழியில்லாத நிலை உருவாகி உள்ளதாகவும், மேலும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் ஒப்பந்தத்தால் உண்மையிலேயே இந்தியாவுக்குத்தான் பலன் அதிகம் என்றும் எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை இந்தியாவுக்கு அணு உலைகள் தர விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில், இதுத் தொடர்பான பணிகள் நல்ல முறையில் நடைபெறும் போது அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் இந்தியா கூடுதலாக 20,000 முதல் 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் தெரிவித்து உள்ளார்.