டெல்லியில் நான்கு நாட்கள் நடைப்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேச நிலம் - கடல் பாதுகாப்பு உபகரணங்கள், தொழில் நுட்பங்கள் தொடர்பான 'பாதுகாப்பு கண்காட்சி - 2008' மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சிக்கு இந்திய தொழில் கூட்டமைப்பும், பாதுகாப்புத் துறை அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி பாதுகாப்புத் துறை சம்மந்தமான இராணுவ தளவாடங்களை விற்க ஏற்ற சந்தையாக இந்தியா உருவாகியுள்ளதைக் காட்டுவதாக அமைந்து உள்ளது. மேலும் பாதுகாப்புத் துறைக்கு தேவையானவற்றை உருவாக்குவதற்கு இணைந்து தொழில்களை தொடங்க முதலீட்டுக்கு வழிவகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கண்காட்சி சர்வதேச அளவில் நிலம் மற்றும் கடல் பகுதி பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், தொழில் நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது பணிகளையும், கருவிகளையும் அறிமுகப்படுத்தவும், உலகச் சந்தையில் விற்கவும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இக்கண்காட்சியில் 30 மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்கின்றன.
இக்கண்காட்சியில் 46 நிறுவனங்களுடன் அமெரிக்காவும், 43 நிறுவனங்களுடன் பிரான்சும் பங்கேற்கின்றன. இது தவிர ரஷ்யா, இங்கிலாந்து, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, செக் குடியரசு, போலந்து, உக்ரைன், சுவீடன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைத்து உள்ளன.
இந்தக் கண்காட்சியில் தான் முதல் முறையாக தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இணைந்து பங்கேற்கின்றன. இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கண்காட்சி நடத்துவது என கடந்த 1998ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன், உற்பத்தி வலிமை, தகுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியாவில் இருந்து பாதுகாப்பு தொடர்பான இராணுவ தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டைத் தொடர்ந்து இக்கண்காட்சி 1999, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.