ஒரிஸ்ஸா மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள், 10 காவல் துறையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலம் நயாகார்க் மாவட்டத்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 50 நக்சலைட்டுகள் அந்த மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளி மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தின் மீது குண்டுகள், ஆயுதங்கள் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
காவல் துறையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையேயான சண்டை நள்ளிரவையும் தாண்டி 12.15 வரை நீடித்ததில் 10 காவலர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். உதவி ஆய்வாளர் நந்தபாணி மிஸ்ரா உள்ளிட்ட 4 காவல் துறையினர் பலத்த காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கட்டக்கில் உள்ள எஸ்.சி.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நயாகார்க் காவல் ஆயுதக் கிடங்கு, காவல் பயிற்சி பள்ளியில் இருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகளையும் நக்சலைட்டுகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இத்தாக்குதலை நடத்தும் முன்பு, பொதுமக்களை தாக்கமாட்டோம் என்றும், இது தங்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையிலான பிரச்சனை என்றும் கூறியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நக்சலைட்டுகள் இந்தி மற்றும் தெலுங்கில் பேசிக் கொண்டதாகவும் அதனால் நக்சலைட்டுகள் சத்தீஸ்கர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முழு உஷார் நிலைப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் காவல் நிலையத்தின் மீது நக்சலைட்டுகள் நடத்திய இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்ட மார்ச் மாதம் 24 ஆம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஆர்.உதயகிரி நகரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.