சிறுநீரகத் திருட்டுக் கும்பல் தலைவன் அமித் குமாரின் இரண்டாவது மனைவி வீட்டில் மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் (சி.பி.ஐ) இன்று ஆய்வு நடத்தினர்.
ஜம்முவில் உள்ள அமித் குமாரின் இரண்டாவது மனைவி சோனியாவின் வீட்டிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வந்த மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் தொடர்ந்து 5 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.
அப்போது, சோனியாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், கனடாவில் அமித் குமார் வாங்கியுள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களின் பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அமித் குமாரின் வங்கி இருப்பு குறித்து அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கனடா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வருவதாக ம.பு.க. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமித் குமாரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவரைப் பற்றி பல்வேறு உண்மைகள் அம்பலமாகியுள்ளன. அறுவைச் சிகிச்சை நிபுணர் என தன்னை கூறிக் கொண்டு வலம் வந்த அவர், ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.