கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான புதிய நிவாரணத் திட்டம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் நடந்த இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "விவசாயிகளின் கடன் தேவைகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. விவசாயிகளில் 80 விழுக்காட்டினர் முறையான வழிகளில் கடன்களைப் பெறாததால், கடன் சுமையில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை முயற்சித்து வருகிறோம்" என்றார்.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்களிப்பு குறைந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், "பொருளாதார அரசியல் காரணங்களுக்காக விவசாயத் துறைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்காமலில்லை. நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதி விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளதுடன், சமூகத்தைப் பாதுகாக்கும் பணியையும் ஆற்றிவருகின்றனர்" என்றார்.
மேலும், மத்திய அரசு கூட்டிய தேசிய வளர்ச்சிக் குழுவின் விவசாயத்திற்கான சிறப்புக் கூட்டத்தின் போது, 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான இரண்டு விவசாயத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், முந்தைய திட்டங்களை விட 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றிக் கூறிய அவர், எதிர்காலத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதத்தை 4 விழுக்காடாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.