வருகிற நிதிநிலை அறிக்கையில் இந்தியத் தொழில்துறையினரின் கவலைகளும், தேவைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
இது குறித்து, புது டெல்லியில் நடந்த இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய அவர், "தொழில்துறையினர் மீது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. உங்களின் கருத்துக்களை அரசு நிச்சயம் பரிசீலிக்கும். வருகிற நிதிநிலை அறிக்கையில் அவை கருத்தில் கொள்ளப்படும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது குறித்து தொடர்புடைய அமைச்சகங்கள் ஆலோசித்து வருகின்றன. அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
கூட்டமைப்பின் தலைவர் ஹபில் கோரகிவாலா பேசுகையில், "ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொழில்துறைக்கு ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன், "இது மிக முக்கியமான கோரிக்கை ஆகும். ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இது பற்றி நீங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள் என்றே நான் கருதுகிறேன்" என்றார்.