வீட்டு உபயோகத்திற்காக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் முகவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின் போது, வீட்டு உபயோகத்திற்காக மானியத்தின் கீழ் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உணவு விடுதிகள் போன்ற வணிகத் தேவைகளுக்காக விற்ற 112 முகவாண்மைகள் கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குற்றத்தில் தொடர்புடைய முகவாண்மைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கு மாநில அரசிற்கு அதிகாரமில்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சகம் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் டெல்லி மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹரூன் யூசுஃப் தெரிவித்தார்.
இதற்கிடையில், டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இச்சிக்கல் பெரிதாக வெடித்தது. இதையடுத்து டெல்லியில், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 112 முகவாண்மைகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மானியத்தின் கீழ் வழங்கப்படும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கள்ளச் சந்தையில் விற்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.