சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனின் விசாக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய அயலுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா தெரிவித்தார்.
தஸ்லிமாவின் விசாக் காலம் வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு மேலும் 6 மாதத்திற்கு அவரின் விசாக் காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஸ்லிமா எழுதிய "லஜ்ஜா' நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரைக் கொல்லப் போவதாக முஸ்லிம் பழமைவாதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன், போராட்டங்களும் நடத்தினர். இதனால் தனது உயிருக்குப் பயந்து கடந்த 1994-ம் ஆண்டிலிருந்தே அயல்நாடுகளில் வசித்து வருகிறார் தஸ்லிமா.
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தஸ்லிமா, தற்போது புது டெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார்.