உலகச் சந்தையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், நமது உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து, புது டெல்லியில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "உலகச் சந்தையின் மாற்றங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் கவலை அளிக்கிறது. அந்த மாற்றங்களைச் சமாளித்து பாதிப்புகளைக் குறைக்கும் வழிகள் குறித்துத் திட்டமிட்டு வருகிறோம். வணிகம் மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர். உலகச் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளால் நமது பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தொடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், பணக்காரர்களை விட ஏழைகளைத் தான் விலை உயர்வு அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு பற்றிக் கேட்டதற்கு, "பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மிகக் குறைந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. விலையை உயர்த்தாமல் மானியத்தை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றால் நாட்டின் நிதிநிலைமை பாதிப்புக்குள்ளாகிவிடும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க இயலாது" என்றார் மன்மோகன் சிங்.