மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரேவின் தொண்டர்களால், மும்பை, நாசிக் நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தாமாகவே வெளியேறி வருகின்றனர்.
மராட்டியத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசிய ராஜ் தாக்ரே நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கைதான தகவல் அறிந்ததும், மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட நகரங்களில் கலவரம் வெடித்தது. மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தொண்டர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,800 பேர் கைது செய்யப்பட்டிருந்தும் வன்முறையைத் தடுக்க முடியவில்லை. மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டதில் ஒருவர் பலியானார்.
இதன் உச்ச கட்டமாக மும்பை, நாசிக் நகரங்களில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் வன்முறையாளர்கள் இறங்கினர். கொலை மிரட்டல் விடுத்தும், தாக்குதல் நடத்தியும் தங்களை வெளியேற்றி உள்ளதாக ரயில் நிலையங்களில் குவிந்திருந்த வட இந்தியர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
இதுவரை, 10,000 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி விட்டதாகவும், குறிப்பாக உ.பி., பீகார் மாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர். அடுத்த சில வாரங்களில் மேலும் சில ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவர் என்று எதிர்பார்ப்பதாகவும், அதுவரை ரயில்களில் கூட்டம் நீடிக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.