இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணையை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் அச்சுறுத்தல் இல்லாத வகையில், நட்பு நாடுகளுக்கு மட்டும் இந்த ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், அவை எந்தெந்த நாடுகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியன் டிபன்ஸ் ரெவியூ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள ராணுவ தளவாட உற்பத்தித் துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தரஜித் சிங் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேட்டதற்கு, 2006 ல் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மாற்றப்பட்டு விரைவாக ராணுவ தளவாடங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றதுடன், நாம் வாங்க இருக்கும் ராணுவ தளவாடங்களை நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து பார்த்த பிறகே வாங்க முடியும் என்பதால், சோதனைகளை நடத்துவதும் இத்தகைய காலதாமதத்துக்கு ஒரு காரணம் என்றார் அவர்.
அதிநவீன ஏவுகணையான பிரமோசை கடற்படை, தரைப்படையில் பயன்படுத்த முடியும். இந்தியாவிலும் ரஷ்யாவிலும் உள்ள ஆலைகளில் இந்த ஏவுகணையின் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா வழங்குகிறது.