சிறுநீரக திருட்டு கும்பல் தலைவன் மருத்துவர் அமித் குமாருக்கு சர்வதேச அளவில் உள்ள தொடர்பு குறித்த விசாரணையை மத்திய புலனாய்வுக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் 500-க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை திருடி விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த அமித் குமாரிடம் ம.பு.க., தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனையை காவல்துறையினர் சோதனையிட்ட போது, இரண்டு கிரேக்க நாட்டினர் சிறுநீரகம் வாங்குவதற்காக வந்திருந்தது தெரியவந்தது. அமித் குமாருக்கு சர்வதேச தொடர்பு இருப்பது அப்போதே உறுதியானது.
இதையடுத்துச் சர்வதேச அளவில் அமித் குமாருக்கு உள்ள தொடர்புகள் பற்றிய விசாரணையை ம.பு.க. தீவிரப்படுத்தி உள்ளது. அமித் குமார் மூலமாகவும், அவனது முகவர்கள் மூலமாகவும் சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் பெற்றவர்களின் பட்டியலைத் தயாரிப்பதற்காக, பொது அறிவிப்பு செய்து சிறுநீரகத்தை தானமாக பெற்றவர்களின் தகவல் பெற ம.பு.க. திட்டமிட்டுள்ளது.
சிறுநீரக திருட்டு சம்பவத்தை கண்டுபிடித்த மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களிடம் இருந்து ம.பு.க.விற்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. இந்த மாநிலங்களில் நடந்த சிறுநீரக திருட்டு குறித்த வழக்குகள் ம.பு.க.விடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமித் குமாருக்கு உதவியதாக கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்யப்பட்ட செவிலியர் சினி ஹோய் லின்டா தங்கியிருந்த ராம் மனோகர் மருத்துவமனை விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. அதில் சில ஆவணங்களை ம.பு.க. கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித் குமாரின் வீடு, அவனுக்கு தொடர்புடைய மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கைதாகியுள்ள மற்றொரு குற்றவாளியான சராஜ் கோவிந்த் கைது செய்யப்பட்டுள்ளான். இவனை மத்திய புலனாய்வு கழகத்தின் கட்டுப்பாட்டில் 14 நாட்கள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தரப்பில் கிடைத்துள்ள தகவல்களை உறுதிப்படுத்த அமித்குமார், உபெந்திர குமார், சராஜ் ஆகியோரை கூட்டாக வைத்து விசாரணை நடத்த ம.பு.க. திட்டமிட்டு வருகிறது.