பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வரும் பேச்சுக்கள் முடிவடைந்து இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தேசிய அணுசக்திக் கழகத் தலைவர் அனில் ககோட்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து தலைநகர் டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் நம்பிக்கையுடன் செயல்படுகிறேன். பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் நடந்து வரும் பேச்சுகள் வெற்றிகரமாக முடிந்தால் மேல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயார்" என்றார்.
பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் நடத்திவரும் பேச்சுகளில் நிறைய தொழில்நுட்ப விடயங்கள் அடங்கியுள்ளதாகவும், அவற்றைப் படிப்படியாகப் பேசி முடிவெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உருவாகியுள்ள அரசியல் சிக்கல்கள் குறித்துக் கேட்டதற்கு, "நான் தொழில்நுட்பம் சார்ந்தவன். எனக்கு அரசியல் தெரியாது" என்று பதில் அளித்தார் ககோட்கர்.