ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால் உருவாகும் பயன்களை உணர்ந்து கொண்டுள்ள இந்தியா, 54 ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை குறிப்பாக பொருளாதாரத் துறையில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இந்திய - ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்ளும் பயணத்தின் போது இதற்கான நடவடிக்கை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் புதிய அணுகுமுறை குறித்து பிரதமர் எடுத்துரைப்பார் என்று அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது, ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி திட்டப் பணிகளில் இந்தியா உதவி செய்வது தொடர்பான அறிவிப்புகளை பிரதமர் இந்த மாநாட்டின் போது அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது..
நடப்பு 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் பொருளாதாரத் துறையில் இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளூம் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது முக்கிய விவாதமாக இம்மாநாட்டின் போது இருக்கும் என்று அயலுறவுத்துறை மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.
சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, எரிசக்தி,சுரங்கம் ஆகிய துறைகளில் இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான செயல் திட்டம் இந்த மாநாட்டின் போது அறிவிக்கப்படும் என்றும், இது ஆப்பிரிக்க நாடுகள் - இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவடையச் செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக ஆப்பிரிக்காவுடனான உறவு மிகப்பெரிய அளவில் வளரவில்லை. அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடக்க உள்ள இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 54 நாடுகளின் முகமாக விளங்கும் ஆப்பிரிக்க கூட்டமைப்பை சேர்ந்த 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.