மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் உறவினர்களுக்குப் பிணைய விடுதலை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 1993 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மும்பை குண்டு வெடிப்பு வழக்கு சம்மந்தமாக தடா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள நிழல் உலக பயங்கரவாதி டைகர் மேமனின் தம்பி யூசுப் மேமன், டைகர் மேமனின் மற்றொரு சகோதரரான சுலைமான் மேமனின் மனைவி ரூபினா ஆகியோர் பிணைய விடுதலை கேட்டுத் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ரூபினா, யூசுப் மேமன் ஆகியோருக்கு சதித் திட்டம் தீட்டுதல், சதிக்கு உடந்தையாயிருத்தல் ஆகிய குற்றங்களின் கீழ் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்த வழக்கில் தங்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தடா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூபினாவின் மனுவைத் தள்ளபடி செய்ய உத்தரவிட்டதோடு, யூசுப் மேமனின் மனநலத்தை சோதனை செய்ய மருத்துவர் குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 1993 ஆம் ஆண்ட மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின் தம்பி சுலைமான் மேமனின் மனைவியான ரூபினா, தனது மாருதி காரை ஆயுதங்கள், வெடிமருந்துகளை கொண்டு செல்வதற்கும், தனது வீட்டை சதித்திட்டம் தீட்டுவதற்கும் கொடுத்து உதவிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் பெண் என்ற காரணத்தால் மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே போன்று சதித்திட்டம் தீட்டுவதற்காக அல்-ஹூசைனி கட்டடத்தில் உள்ள தனது வீட்டை குற்றவாளிகளுக்கு கொடுத்தது, சதித் திட்டம் நிறைவேற உதவியது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட யூசுப்பின் மனநிலை மரணத் தண்டனை பெறத் தகுதியான நிலையில் இல்லாததால் அவருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்பட்டது.